பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு எதிர்க்கட்சி மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பிதரமர் மோடியின் கருத்துக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ” மாநிலங்கள் வரியைக் குறைக்கக் கோருவதற்கு பிரதமர் வெட்கப்பட வேண்டும். 2015-ம் ஆண்டு முதல் தனது மாநிலத்தில் எரிபொருள் வரி உயர்த்தப்படவில்லை.
மாநிலங்களைக் கேட்பதற்குப் பதிலாக மத்திய அரசால் வரிகளை ஏன் குறைக்க முடியாது ? உங்களுக்கு தைரியம் இருந்தால், உயர்த்தப்பட்ட வரிகளை விளக்குங்கள்” என்று குறிப்பிட்டார்.
பின்னர் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறுகையில், ” பிரதமர் மோடி முற்றிலும் ஒருதலைப்பட்சமாக மற்றும் தவறான உரையை நிகழ்த்தியுள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட தகவல் தவறானவை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு ரூபாய் மானியமாக வழங்குகிறோம்.
இதற்காக ரூ.1500 கோடி செலவிட்டுள்ளோம். எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.97 ஆயிரம் கோடி பாக்கி உள்ளது. அந்தத் தொகையில் பாதி கிடைத்த மறுநாளே ரூ. 3 ஆயிரம் கோடி பெட்ரோல், டீசல் மானியம் வழங்கினோம். மானியம் வழங்குவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அரசாங்கத்தை எப்படி நடத்துவது.
ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்கள் பேச வாய்ப்பில்லை என்பதால், அவர்களால் பிரதமரை எதிர்க்க முடியவில்லை. பாஜாக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் குஜராத்தில் ரூ.5000 கோடி மற்றும் ரூ.3000 கோடி பெட்ரோல் மற்றும் டீசல் மானியம் வழங்கியதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நல்ல நிதி உதவி கிடைக்கிறது. மாறாக எனது மாநிலத்திற்கு மிகக் குறைவாகவே கிடைத்துள்ளது ” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில் மம்தா பேனர்ஜி கூறுகையில், ” பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாநிலங்களை நீங்கள் அவமானப்படுத்துவது உங்களின் கேவலமான செயல்திட்டம்.
மக்களின் சுமையை குறைக்க மத்திய அரசு என்ன செய்கிறது? அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? ஜனநாயகத்தை குப்பையில் போடாதீர்கள். எங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க முடியாது என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில் மத்திய அரசுக்கு ரூ.24.38-ம், மாநிலத்திற்கு ரூ.22.37-ம் வாட் வரியாக உள்ளது. பெட்ரோல் விலையில் மத்திய அரசு ரூ.31.58-ஆகவும், மாநில அரசு வரியாக ரூ.32.55-ஆகவும் உள்ளது. எனவே மாநில அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று கூறுவதில் உண்மையல்ல” என்று கூறினார்.
மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் இடையேயான கருத்து மோதல் குறித்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி கூறியதாவது:-
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்குப் பதிலாக எரிபொருளின் மீதான வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை மலிவாக இருக்கும்.
மகாராஷ்டிரா அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.32.15 என்றும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் ரூ.29.10 என்றும் விதிக்கிறது. ஆனால் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.14.51-ஆகவும், உத்தரபிரதேசம் ஆளும் ரூ.16.50-ஆகவும் மட்டுமே விதிக்கப்படுகிறது. போராட்டங்களால் உண்மைகளுக்கு சவால் விடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. டெல்லி அதிகாரம் யாருக்கு? – சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு, டெல்லி அரசு வாதம்