மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு Leprosy நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார் .
ஐனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 50 நோயாளிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரையம்பதி,ஏறாவூர்,செங்கலடி போன்ற பகுதிகளில் அதிகமான நோயாளிகள் இனங்காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் தொழுநோய் தடுப்பு இயக்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் (28) இடம்பெற்றது.
தேசிய ரீதியாக கணிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டம், இந்நோயில் முதலாவது இடத்தில் காணப்படுகிறது. தொழு நோயானது சுவாச தொற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும். இத் தொற்றினால் பாதிக்கப்பட்டவரை இனங்காண்பதற்கு பல வருடங்கள் தேவைபடுகிறது. பொதுவாக தொழுநோய் அடையாளங்களாக தோலில் உணர்வு அற்ற மற்றும் வெந்நிற படலங்கள், சிறு கட்டிகள் காணப்படும்.
இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக தோல் வைத்திய நிபுணரை அணுகி சிகிச்சையை 6 மாதம் முதல் 1 வருடத்தினுள் பெறுவதன் மூலம் பூரணசுகமடையலாம் என இந்நிகழ்வில் சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
1983க்கு முற்பட்ட காலகட்டத்தில் இந் நோய்க்கான மருத்துவ வசதிகள் காணப்படவில்லை தற்போது சர்வதேச தரத்திலான மருந்துகள் உலக சுகாதார ஸ்தாபனம் மூலம் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் இந் நோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மையால் சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை பெற்று தம்மையும் தமது சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது அவர்கள் கடமையாகும் என இந்த நிகழ்வில் வலியுறுத்த்பட்டது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் , உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் ,,வைத்தியர் குணராஐசேகரம் , வைத்தியர் டான் , பொது சுகாதார பரிசோதகர் வேணிதரன் மற்றும் காவேரி கலா மன்றம்,அலைன்ஸ் டெவலோப்மன்ட் ட்ரஸ்ட் ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.