மத சுதந்திர அறிக்கை ஹிந்து அமைப்பு கண்டனம்| Dinamalar

வாஷிங்டன்-‘ஹிந்து மதம் குறித்த அச்ச உணர்வு உள்ளோர் தான், மதச் சுதந்திரம் பற்றிய அறிக்கையை தயாரித்துள்ளனர்’ என, ‘ஹிந்து பேக்ட்’ என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், அந்நாட்டு அதிபர் ஜோ பைடனிடம், மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை அளித்துள்ளது. அதில், ‘மத சுதந்திரத்தில் இந்தியா, சீனா, பாக்., ஆப்கன் உள்ளிட்ட, 11 நாடுகளில் பிரச்னைகள் உள்ளன. எனவே, அந்நாடுகளை ‘கவலைக்குரிய நாடுகள்’ என அறிவிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் மத சுதந்திர நிலை குறிப்பிடத்தக்க வகையில் மோசமடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. இது குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிந்து பேக்ட்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த சில ஆண்டுகளில் கூறப்பட்டதைப் போலவே, இந்த ஆண்டும், இந்திய மத சுதந்திரம் குறித்து, ஆதாரமற்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை குறித்து, ஊடகத் தகவல்கள் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தயாரித்தோருக்கு, இந்தியா மீதும், ஹிந்துத்துவா மீதும் அச்சம் உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.