மரியுபோல்: ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து தனி ஒருவராக 200 பேரை காப்பாற்றியிருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த கிளப் ஓனர் ஒருவர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு இடையே மரியுபோலிலிருந்து 200 பேரை காப்பாற்றி இருக்கிறார் உக்ரைன் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் ஒருவர்.
அந்த ஆபத்தான நாட்களை நினைவு கூர்ந்த 36 வயதான மைக்கைலோ பூரிஷேவ், “மார்ச் 8 ஆம் தேதி முதல் நான் மரியுபோலுக்குள் 6 முறை நுழைந்திருக்கிறேன். சிவப்பு நிற வேனில் நான் மரியுபோலில் நுழையும்போது நகரம் புகை மேகம் சூழ ஆங்காங்கே நெருப்புக் கோலமாக இருந்தது. கடைசியாக நான் சென்றபோது அங்கிருந்த கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகி இருந்தன. எனது வேனின் கண்ணாடிகள், மூன்று பக்க ஜன்னல்கள் மற்றும் ஒரு பக்க கதவு ஆகியவை ரஷ்ய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன. நல்ல வேளையாக வேனில் இருந்த யாருக்கும் அடிபடவில்லை. இறைவன் காப்பாற்றிவிட்டார். எனது பயணத்தில் மரியுபோல் வாசிகள் 200 பேரை நான் காப்பாற்றி இருக்கிறேன். மார்ச் 8 ஆம் தேதி ஆரம்பித்த என் பயணம் 28 ஆம் தேதி முடிவடைந்தது.”
https://twitter.com/Reuters/status/1519105293912788992?s=20&t=rdOpdwRPWbVS_EOfCKQg9Q
எனது வேன் போரின் அடையாளங்களை தாங்கியுள்ளது. போர் முடிந்தபின் மரியுபோல் திரும்பும்போது நான் எனது வேனை நிச்சயமாக நினைவுச்சின்னமாக மாற்றுவோம்” என்றார்.
இந்த நிலையில் மைக்கைலோ பூரிஷேவ்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ரஷ்யப் படைகள் படையெடுப்புக்குப் பின் மரியுபோலில் சுமார் 20,000 பேர் பலியாகி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.