சேலம்:
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக
எடப்பாடி பழனிசாமி
இருந்தார். அப்போது 2011 முதல் 2016 வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார்.
பின்னர் 2016ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அப்போது அதே அமைச்சர் பதவிகளில் நீடித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார். அப்போதும் கட்சியின் மாவட்ட செயலாளராக நீடித்தார்.
இந்த நிலையில் கடந்த 25ந் தேதி சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி அமைப்பு தேர்தல் மனு வாங்கும் போதும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தார். அப்போது மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனையும், மாவட்ட செயலாளருக்கு மனு அளிக்க செய்தார்.
மாவட்ட செயலாளராக பழனிசாமி மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது நண்பரான இளங்கோவன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2011 முதல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த பழனிசாமி 11 ஆண்டுகளுக்கு பின் அந்த பதவியை விட்டு கொடுத்து இளங்கோவனுக்கு வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.