கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் நாகர்கோவிலில் அமைந்துள்ளது. எஸ்.பி அலுவலகத்தின் முன் பக்கம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் நித்ய லட்சுமணவேல்(59). இவர் இந்த பள்ளியில் உள்ள மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி மாணவிகளைத் தொட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும், சைல்டு லைன் எண் 1098-க்கும் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் ஷகிலா பானு விசாரணை நடத்தினார். விசாரணையில் தலைமை ஆசிரியர் நித்ய லட்சுமணவேல் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் ஷகிலா பானு நாகர்கோவிலில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தபோது, 5-ம் வகுப்பில் படிக்கும் மூன்று மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். நித்ய லட்சுமணவேல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
அந்த பள்ளியிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகும் திருந்தாத அவர் இப்போது போலீஸில் சிக்கியுள்ளார். போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் நித்ய லட்சுமணவேலை சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 59 வயதான நித்ய லட்சுமண வேல் ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளன எனக் கூறப்படுகிறது.