அசாமில் 7 புற்றுநோய் மையங்களைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, 7 புதிய புற்றுநோய் மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்கள் நலமாக இருக்கவும் மருத்துவனைகள் வெறுமையாக இருக்கவும் வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
அசாம் மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடி திப்ரூகரில் உள்ள புற்றுநோய் மையத்தைப் பார்வையிட்டார். அவருடன் ஆளுநர் ஜெகதீஷ் முகி, முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் ஆகியோரும் சென்றனர். திப்ரூகர் கானிகார் மைதானத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.
அசாமில் இந்திய அரசும் டாட்டா அறக்கட்டளையும் இணைந்து அமைத்துள்ள 7 புற்றுநோய் மையங்களைப் பிரதமர் மோடியும், தொழிலதிபர் ரத்தன் டாட்டாவும் தொடக்கி வைத்தனர். புதிதாக 7 புற்றுநோய் மையங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் பேசிய ரத்தன் டாட்டா, தனது இறுதிக் காலத்தை நலவாழ்வுக்காகச் செலவிடுவதாகத் தெரிவித்தார். அனைவராலும் ஏற்கப்படும் சிறப்பு வாய்ந்த மாநிலமாக அசாமை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒரு காலத்தில் ஏழாண்டுக்கு ஒரு மருத்துவனை திறந்தாலே அது பெரும் கொண்டாட்டம் என்றும், இன்று ஒரேநாளில் 7 புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களின் சேவைகளுக்காகத் தான் மருத்துவமனைகள் எனக் கூறிய பிரதமர், இந்த மருத்துவமனைகள் வெறுமையாக இருக்கவும் மக்கள் நலமாக இருக்கவும் தான் வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்தார். யோகா, உடல் உறுதி, தூய்மை இயக்கம் ஆகியவற்றின் மூலம் வருமுன் காப்பதில் அரசு அக்கறை காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் புதிய நோய்காண் மையங்கள் திறக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டுக்கு முன் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்ததாகவும், அதன்பிறகு 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, இங்குள்ள புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அசாமுக்கு மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவுக்கே பயனளிக்கும் எனத் தெரிவித்தார். இந்த மிகப்பெரிய சாதனைக்குப் பங்களித்த ரத்தன் டாட்டாவுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.