வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமைந்திடாத ஒருவனுக்கு, இரண்டு பெண்கள் வந்ததும் மொத்தமாக எல்லாம் மாறிவிட, அவன் அந்த இருவரையும் ‘சமமாக’க் காதல் செய்யும் கதையே இந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
சிறுவயது முதலே தன்னை துரதிர்ஷ்டசாலியாக நினைத்து தன் தாயிடம் இருந்தே விலகி வாழ்கிறார் ராம்போ. பகலில் கேப் டிரைவர், இரவில் பப்பில் பவுன்சர் என மாறி மாறி உழைக்க, அவரின் அந்தப் பணிகளின் வாயிலாகவே அறிமுகமாகிறார்கள் கண்மணியும், கதிஜாவும். சட்டென ராம்போவின் வாழ்வில் எல்லாமே நல்லதாய் நடக்க, இருவரையுமே காதலிக்கத் தொடங்குகிறார். யார், யாருடன் இணைந்தார்கள், இறுதியில் மூவரும் எடுக்கும் முடிவு என்ன என்பதை காமெடி கொஞ்சம் தூக்கலாகக் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
ராம்போ – கண்மணி – கதிஜா என வழக்கமான முக்கோணக் காதல் கதைதான். ராம்போவாக விஜய் சேதுபதி, தனக்குரிய நக்கல் நையாண்டிகள், துள்ளலான உடல்மொழி என அதே விஜய் சேதுபதி. ஆனாலும் ரசிக்க வைக்கிறார். என்ன, கடைசிவரை அவரின் சீரியஸான முகத்தையே காட்டாமல் ஜாலிமுகத்தையே காட்டுவது கதையின் கனத்தைக் குறைக்கிறது. கண்மணியாக நயன்தாரா, தங்கை மற்றும் நோயால் அவதியுறும் தம்பியுடன் பொறுப்பான அக்காவாக வலம் வருகிறார். அவரின் பின்கதையும், ராம்போவுடன் அவர் காதலில் விழும் தருணங்களும் சட்டென காத்துவாக்குல எழும் சின்னப் புத்துணர்ச்சியாய் கடந்து போகின்றன.
ஆனால், இந்த இருவரையும் விட அதிகம் ஸ்கோர் செய்வது சமந்தாதான். கலகலவென பேசும் போல்டான பெண்ணாக குட்டிக் குட்டி ரியாக்ஷன்களால் கொள்ளை கொள்கிறார். இரண்டு நாயகிகள் என்றாலும் அவர்களின் பாத்திரங்கள் தனித்தன்மையுடன் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. கௌரவத் தோற்றத்தில் பிரபு, காமெடிக்கு மாறன், ரெடின் கிங்ஸ்லி என மூவரையும் கதைக்குத் தேவையான அளவு மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதியின் குடும்பத்தாராக வரும் நடன இயக்குநர் கலா தொடங்கி பலரையும் வைத்து என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. நடிகர்கள் தேர்விலிருந்து, காட்சியமைப்புகள் வரை அதில் ஏன் இத்தனை செயற்கைத்தனம் எனப் புரியாதவாறே அவர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நகர்கின்றன. சிலரின் டப்பிங்கும் சுத்தமாக ஒட்டவில்லை.
அனிருத்தின் இசையில் ‘டூடுட்டூ… டூடுட்டூ….’ பாடல் தாளம்போட வைத்தால், ‘நான் பிழை’ பாடல் மயிலிறகால் வருடுகிறது. சுமாரான காட்சிகளுக்கும் வலு சேர்த்திருக்கிறது அவரின் பின்னணி இசை. எஸ்.ஆர்.கதிர், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஆடை வடிவமைப்பாளர்களின் உழைப்பும் படத்துக்குத் தேவையான இளமையைக் கொடுத்திருக்கின்றன.
படத்தின் முதல்பாதி டிபிக்கல் விக்னேஷ் சிவன் ஸ்டைலில் குறும்பும் இளமையுமாய் இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அவருக்கே என்ன செய்வது எனத் தெரியாததால் திரைக்கதை திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லி அலுக்க வைக்கிறது.
சின்னச் சின்ன வசனங்களில் கவனம் ஈர்க்கிறார் விக்னேஷ் சிவன். ‘அடடே’ என நாம் அவற்றால் நிமிர்ந்து உட்காரும்போதே, ‘ஒரு பொண்ணு ஒரு விஷயம் தனக்கு வேணும்னு நினைக்கிறதைவிட இன்னொரு பொண்ணுக்கு அது போய்டக்கூடாதுனு நினைப்பா’ போன்ற ஹுசைனி பேசும் வசனங்கள் குறுக்கே வந்து ‘அடபோங்கப்பா’ என மீண்டும் தளர வைக்கிறது. எல்லாம் முடிந்தபின் விஜய் சேதுபதி தனியாய் பேசும் தத்துவ வசனங்களும் ரொம்ப நீளம்.
‘இரண்டு பெண்களை சமமாகக் காதலிக்கும் ஆண்’ என புதுமையாய் கதை சொல்வதாய் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பார் போல இயக்குநர். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட மூவருக்குமே உடன்பாடு இருக்கும்பட்சத்தில்தானே ‘சமமாய்’ இருக்கமுடியும்? படம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் ஆணாதிக்கப் பார்வையில், அவர் பூசி மெழுகும் சப்பைக் காரணங்களில், நாம் அவர்மீது பச்சாதாபப்படவேண்டும் என திணிக்கப்பட்ட வறட்டு சிம்பதி கதையில் நகர்வதால் இறுதியாக 80-களில் சொல்லப்பட்ட ‘ஆம்பளைக்கு ரெண்டு காதலி/பொண்டாட்டி இருக்குறதெல்லாம் சகஜம்தான்’ டெம்ப்ளேட்டில் சிக்கிக் எரிச்சலூட்டுகிறது. மொத்தமாய் தன்பக்கம் விமர்சனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக போகிறபோக்கில் ‘இதெல்லாம் தப்புப்பா’ என துணை கேரக்டர்கள் வழியே பேசவைத்து பேலன்ஸ் செய்யவும் முனைகிறார் இயக்குநர். சமீபகாலமாக சீரியஸ் விஷயங்களில் மாற்றுக்கருத்தை முன்வைக்கும் இயக்குநர்கள் இந்த ‘டேமேஜ் கன்ட்ரோல்’ யுக்தியை கையாள்வதன் ஒருபகுதிதான் இது.
விஜய் சேதுபதிக்காவது இந்த உறவில் இருக்க என ஏதோ காரணங்களைச் சொல்கிறார்கள். கண்மணிக்கும் கதீஜாவுக்கும் கடைசிவரை ‘இவ்வளவு கஷ்டப்பட்டு, பொய் சொல்லி ஏமாத்துற ஒருத்தன்கூட ஏன் இருக்கணும்’ என்பதற்கான காரணம் என இம்மியளவுகூட ஒன்றுமில்லை. அவர்களை ஜஸ்ட் லைக் தட் சிரிப்பாக கதை கடந்துசெல்வதுதான் சோகம்.
Polyamorous, Open relationship என உலகமயமாக்கலுக்குப் பின்னான உறவுமுறைகளும் அதுசார்ந்த சிக்கல்களும் பல்வேறு பரிமாணங்கள் எடுத்திருக்கும் நிலையில் அதைப் பேசுகிறேன் என தடம் மாறி, சொல்வதையும் ஒரு காட்சி சீரியஸாக மறுகாட்சி காமெடியாக என சீரில்லாத உணர்ச்சிகளால் நிரப்பி .. இறுதியாய் ஏனோதானோவென முடிவுக்கு வருகிறது இந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.