தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 29 ஆயிரம் டன் நிலக்கரி வந்துள்ள நிலையில், மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் இயங்கி வருகின்றன. 5 பிரிவுகளுக்கும் நாள்தோறும், 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தட்டுப்பாடு காரணமாக 4 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் 29 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டுவரப்பட்டது. அது அனல் மின் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒன்று, இரண்டு, மூன்றாவது அலகுகளில் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல இடங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. இந்நிலையில் அனல்மின் நிலையங்களில் 10 நாட்களுக்கு போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். அனல்மின் நிலையங்களில் 2 கோடியே 20 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர், அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரஹலாத் ஜோஷி, அனல்மின் நிலையங்கள் முழுமையான உற்பத்தி திறனுடன் இயங்கவில்லை எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM