சென்னை: தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள தரைப் பாலங்களுக்கு பதில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு ஆண்டுகளில் இப்பணிகள் முடிவடையும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தென்காசி உறுப்பினர் எஸ்.பழனிநாடார், ‘‘தென்காசி- திருநெல்வேலி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். புறவழிச்சாலை அமைக்க வேண்டும்’’ என்றார். பல்லாவரம் உறுப்பினர் இ.கருணாநிதி, ‘‘குரோம்பேட்டை- திருமுடிவாக்கம் இடையிலான சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும்’’ என்றார்.
ஒகேனக்கல் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பென்னாகரம் உறுப்பினர் ஜி.கே.மணியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பரசேரி – புதுக்கடை இடையிலான மாநில நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கிள்ளியூர் உறுப்பினர் ராஜேஷ்குமாரும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தென்காசி – நெல்லை இடையில் 45 கி.மீ. தொலைவிலான 2 வழிச் சாலையை 4 வழிச்சாலையைாக மாற்றும் திட்டப் பணிகள் 2 பிரிவுகளாக ரூ.176 கோடி, ரூ.254 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
நிலம் எடுப்பு, மரங்கள் வெட்டுதல் உள்ளிட்டவற்றால் தாமதம் ஏற்பட்டது.முதல் பிரிவு பணிகள் வரும் செப்டம்பரிலும், அடுத்த பிரிவு பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்திலும் முடிக்கப்படும். புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடர்பாக ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை- திருமுடிவாக்கம் சாலை 7 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த சாலையை 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்துவதா அல்லது 4 வழிச் சாலையாக மாற்றுவதா என்பது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி – ஒகேனக்கல் சாலை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலையா அல்லது வனத் துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெறுவதா என்பது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை வெள்ளக் காலத்தில் ஆய்வு செய்த முதல்வர், பல்வேறு சாலைகளை மேம்படுத்தவும், புதிதாக சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கித் தந்துள்ளார்.
மாநிலம் முழுவதும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மரங்கள் வெட்டுவது, நில எடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதம் ஆகின்றன. மாநிலம் முழுவதும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, சிதிலமடைந்த நிலையில் உள்ள தரைப் பாலங்களுக்கு பதில், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் ஓரிரு ஆண்டில் முடியும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.