திருப்பதி:
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் துக்கிராலா தும்மலபுடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவரது மனைவி லட்சுமி திருப்பத்தம்மா (34). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சிவசக்தி சாய்ராம் (25), வெங்கட் சாய் சதீஷ் (24).
லட்சுமி திருப்பத்தம்மாவுக்கும், வெங்கட் சாய் சதீஷ்க்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் நண்பர்களான வெங்கட் சாய் சதீஷ், சிவசக்தி சாய்ராம் இருவரும் லட்சுமி திருப்பத்தம்மா வீட்டிற்கு சென்றனர். முதலில் வெங்கட் சாய் சதீஷ் வீட்டிற்குள் சென்று வந்தார். அதன்பின்னர் சிவசக்தி சாய்ராம் வீட்டிற்குள் சென்றார்.
லட்சுமி திருப்பத்தம்மாவை ஆசைக்கு இணங்கும்படி சிவசக்தி சாய்ராம் கட்டாயப்படுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர் லட்சுமி திருப்பத்தம்மாவை பலவந்தமாக பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை இறுக்கினார்.
இதில் மூச்சுத்திணறி லட்சுமி திருப்பத்தம்மா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து லட்சுமி திருப்பத்தம்மாவின் செல்போனை எடுத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மாலை வீட்டிற்கு வந்த லட்சுமி திருப்பத்தம்மாவின் தாய் மகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தும்மலுபுடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துக்கிராலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். செல்போன் எண்ணை வைத்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமி திருப்பத்தம்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
வெங்கட்சாய் சதீசுக்கும், லட்சுமி திருப்பத்தம்மாவுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் வெங்கட் சாய் சதீஷ் தனது நண்பரையும் உடன் அழைத்துச் சென்றதால் அவரது ஆசைக்கு இணங்க லட்சுமி திருப்பத்தம்மா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக தெரிவித்தனர்.
வீடு புகுந்து பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட லட்சுமி திருப்பத்தம்மா வீட்டிற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் சென்றார்.
அங்கு தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நாராலோகேஷ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். 2 கட்சிகளின் தொண்டர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் தலையில் கல் விழுந்து மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு 2 கட்சி தொண்டர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குண்டூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.