காபூல்:
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் நடத்தி வந்த நீண்டகால போர் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க படைகளின் வாபசை தொடர்ந்து, தலிபான்களின் கைவசம் ஆட்சி சென்றது.
எனினும், பயங்கரவாத செயல்களில் இருந்து விலகி பொதுமக்களுக்கு உரிய நல்ல ஆட்சியை வழங்குவோம் என தலிபான்கள் கூறினர். ஆனால், தலிபான்களுக்கு அஞ்சி அந்நாட்டு மக்களில் பலர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதன்படி, சமீபத்தில் ஹெராத் மாகாணத்தில் உள்ள சலூன் கடைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானிய ஆடவர்களில் அதிலும் குறிப்பிடும்படியாக மாணவர்களுக்கு மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக, மேற்கத்தியர்களை போன்று முடிகளை வெட்ட கூடாது என அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்றும் தலிபான்கள் எச்சரித்து உள்ளனர்.
இதற்கு முன்பும் இதேபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்கள் எதிர்கொண்டனர். அரசு பணியிலுள்ள ஆடவர்கள் பணியாற்றும்போது முழு அளவில் வளர்ந்த தாடி வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.
இதனால், பல்வேறு அரசு அமைச்சகத்தில் பணியாற்றிய பலர் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. ஏனெனில் அவர்களில் பலர் தாடியை சீர் செய்திருந்தனர். அல்லது தலிபான்களின் இஸ்லாமிய சட்டப்படி முறையாக உடை அணிந்து இருக்கவில்லை. இதனை காரணம் காட்டி அரசு பணியாளர்கள் வேலைக்கு செல்ல தடை செய்யப்பட்டனர்.
இதுதவிர, திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை செய்யப்பட்டு இருந்தது. ஆடவர் மற்றும் மகளிர் தனித்தனி அறைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது என கடந்த அக்டோபரில் ஸ்புட்னிக்குக்கு அளித்த பேட்டியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறினார்.
இந்த சூழலில், ஹெராத் மாகாணத்தில் துணி விற்பனை செய்யும் கடைகளில் வைக்கப்படும் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது என அவர்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் நாடகங்கள் மற்றும் சோப் விளம்பரங்களில் பெண்கள் நடிக்கும் காட்சிகளை நிறுத்தும்படியும் தலிபான்கள் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.