கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் ஆய்வகத்தில் இருந்த வேதி உப்பை சாப்பிட்ட நிலையில், 11 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.
காவேரிப்பட்டினம் அருகே மோரனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு இடைவேளையின்போது பூட்டப்படாமல் வெறும் தாழ்பாள் போட்டிருந்த ஆய்வகத்தை திறந்ததாக கூறப்படுகிறது.
உள்ளே சென்ற மாணவர்கள், பார்ப்பதற்கு சாதாரண உப்பை போல் உள்ள மெக்னீசியம் பாஸ்பேட்டையும், மிளகாய் பொடி போல் உள்ள ஃபெர்ரிக் குளோரைடையும் எடுத்து கலக்கி மாங்காய் துண்டுகளில் தொட்டு சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் மயக்கம் அடைந்த மாணவர்கள் உடனடியாக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உப்புக்கரைசல் கொடுத்து முதலுதவி செய்யப்பட்டது.
பிறகு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.