தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள் ரத்தம் தானம் கொடுக்க இதுவரை நீட்டித்து வந்த தடையை நீக்கியுள்ளது, கனடா அரசு.
ரத்த தானத்தின் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக 1992-ம் ஆண்டு முதல் தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள் (gay) ரத்தம் தானம் கொடுக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரத்த தானம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு ஐந்தாண்டு கால இடைவெளியானது மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ரத்த தேவைக்காக, பிற நாடுகளில் இருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றுக் கொண்டிருக்கும் கனடா நாட்டு ரத்த சேவைகள் அமைப்பானது, கடந்த ஆண்டு இந்தத் தடையை ரத்துசெய்ய கோரிக்கையை சமர்பித்ததையடுத்து, இதுவரை நீட்டித்து வந்த தடையை நீக்கி, தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள் ரத்த தானம் செய்யலாம் என கனடா நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருங்கால நன்கொடையாளர்களிடம் ஸ்கிரீனிங் செயல்பாட்டின் போது, அவர்களின் பாலியல் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்காமல், அதிக ஆபத்துள்ள பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் இதே போன்ற தடைகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.