“இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கமுடியாது!" – முதல்வர் ஸ்டாலின்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக, “இலங்கையில் உணவு, அத்தியாவசியப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்டப் பகுதிகளில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கமுடியாது. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.

ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கு 500 டன் பால் பவுடர், 40 ஆயிரம் டன் அரிசி, 137 டன் மருந்து பொருள்களை நாம் வழங்க நினைக்கிறோம். இதை மாநில அரசு தனியாக அனுப்ப முடியாது. ஆனால், ஒன்றிய அரசின் அனுமதியோடு இந்தியத் தூதரகம் வழியாகத் தான் இலங்கை மக்களுக்கு இந்தப் பொருள்களை அனுப்பிவைக்க முடியும். இலங்கை மக்களுக்கு உதவ பிரதமர் மோடியிடம் நேரடியாகவும் கோரிக்கை வைத்திருக்கிறேன். அனுமதி அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.

சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதிகோரிய தீர்மானத்துக்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதிகோரி, முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.