இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்

கொழும்பு :

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிபரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக, இலங்கை மக்கள் இன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து, தலைநகர் கொழும்புவில் வங்கி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் இன்று அணிவகுப்புகளை நடத்தியதுடன், அதிபர் அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற பிரதான எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக அங்கு வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, ஆசிரியர்கள் வரவில்லை மற்றும் பொது போக்குவரத்து தடைபட்டது.

மேலும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், உணவு இடைவெளியில் போராட்டத்தில் பங்கேற்பதாகவும் தெரிவித்தனர்.

மார்ச் 31 முதல் தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள், இலங்கையின் நெருக்கடிக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் பொறுப்பு என்று கூறி வருகின்றனர்.

அதேநேரம் ராஜபக்ச சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டு உள்ளனர். அத்துடன் தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் ெபாதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டு உள்ளார். அதேநேரம் தான் பதவி விலக மாட்டேன் எனவும், எந்தவித இடைக்கால அரசும் தனது தலைமையில்தான் அமைய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

ஆனால் எதிர்க்கட்சிகள், ராஜபக்ச சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்துவிட்டன. எனினும் இன்று நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.