கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1948ல் பிரிட்டனிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்ற பின் இதுவரை வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நாடு முழுதும் பத்து மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு உள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் இலங்கை அதிபர் வீட்டு முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, தபால், தேயிலை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் இலங்கை ஸ்தம்பித்தது. சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டன. ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் இயங்கின.
ஊழியர்கள் வராததால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இலங்கையில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement