கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த, 1948ல் பிரிட்டனிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்ற பின், இதுவரை காணாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நாடு முழுதும் பத்து மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு உள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் இலங்கை அதிபர் வீட்டு முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, தபால், தேயிலை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் இலங்கை ஸ்தம்பித்தது.
பல இடங்களில் சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டன. ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் இயங்கின. ஊழியர்கள் வராததால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகமா தெரிவித்தார்.
இலங்கையில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement