இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் இன்று ஆற்றிய உரையில், “இலங்கையில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இலங்கையில் மண்ணெண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் ரசாயன உரங்கள் கிடைப்பதில்லை. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடம் இருந்து அதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. இதனால் `பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்கிற நிலையில் இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆகவே ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசியை இலங்கை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
மேலும் ரூ.28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்களை வழங்கவும்; ரூ.15 கோடியில் 500 டன் பால்பவுடர்களை இலங்கை மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது” எனக்கூறினார். இதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படியாக இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க அனுமதி அளிக்க தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: “இளங்காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியிருக்கிறேன்” – ஓ.பன்னீர்செல்வம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM