லீவ் : உக்ரைனில், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள கெர்சான் நகரை தனி அதிகாரம் உடைய பிராந்தியமாக மாற்ற, அங்கு ஓட்டெடுப்பு நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இம்மாத துவக்கத்தில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறிய ரஷ்ய படையினர், கார்கிவ், மரியுபோல் நகர்களில் மட்டும் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், தெற்கில் அமைந்துள்ள கெர்சான் பகுதியில், ரஷ்ய படையினர் புதிய உத்தியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அப்பகுதி மக்களின் ஆதரவுடன், கெர்சானை தனி அதிகாரம் உடைய பிராந்தியமாக மாற்ற, ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதற்காக, மே மாத துவக்கத்தில் ஓட்டெடுப்பு நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு தேவையான ஓட்டுச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் உக்ரைனின் மனித உரிமைகள் ஆணைய அதிகாரி லியுட்மிலா டெனிசோவா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரைன்அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
கெர்சான் பகுதியை, தனி அதிகாரம் உடைய பிராந்தியமாக உருவாக்க, ரஷ்யா முயற்சிக்கிறது. அதற்காக, ஓட்டெடுப்பு நடத்தவும் முடிவு செய்துள்ளது. எனவே, அங்குள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement