திருப்பூர் மாவட்டம், உடுமலையில், ஒரே மாணவருடன் இயங்கி வரும் அரசுப் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உடுமலை பேருந்து நிலையம் அருகே நகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக, இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த சூழலில், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக, அருகே இருந்த வி.பி.புரத்தில் உள்ள வீடுகள் மாரியம்மாள் நகருக்கு மாற்றப்பட்டன. இதனால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறையத் தொடங்கியது. மேலும், பள்ளியை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் பெரும்பாலும் வணிக நிறுவனங்களே உள்ளன.
குறைவாக உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களும், தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்பவில்லை. இதனால், நகராட்சி தொடக்கப்பள்ளியில், தற்போது முகம்மது ஆதில் என்ற ஒரே ஒரு மாணவர் மட்டுமே 5 -ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்காக தலைமை ஆசிரியர் ஒருவரும் பணியில் உள்ளார். முகம்மது ஆதில் இந்த ஆண்டோடு பள்ளியைவிட்டு வெளியேறும் நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால் பள்ளியை இழுத்து மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி மூடப்படாமல் தடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM