உத்தரப் பிரதசே மாநிலம், மதுராவுக்கு உட்பட்ட நௌஜீல் பகுதியில் இன்று ஒரு திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண் காஜலின் உறவினர்கள் மணமேடைக்கு விரைந்தனர்.
அப்போது, வாலிபர் ஒருவர் மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டதும், அதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையும் அறிந்து அவரது பெற்றோர், உற்றார், உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
காஜலை மணமேடையில் வைத்து சுட்டுக் கொன்றது அவரது
முன்னாள் காதலன்
என்றும், காஜல் தன்னை திருமணம் செய்துக் கொள்ளாத விரக்தியில் அவர் இப்படியொரு முடிவையை மணப்பெண் கோலத்தில் இருந்த தமது காதலிக்கு அளித்ததாகவும் தெரிகிறது.
திருமண சடங்கு முடிந்து ஆடையை மாற்றுவதற்காக எனது மகள் அறைக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருமண மண்டபத்துக்குள் புகுந்து அவளை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்று காஜலின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுரா நகர போலீசார், பட்டப்பகலில் நிகழ்ந்துள்ள இக்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.