“எனது ஆலோசனைகளையும், யோசனைகளையும் காங்கிரஸ் தலைமையிடம் கூறிவிட்டேன்; இனி அதனை செயல்படுத்துவதும், செயல்படுத்தாமல் இருப்பதும் அக்கட்சியின் விருப்பத்துக்கு உட்பட்டது” என்று தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் எவ்வாறு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்; எந்த மாதிரியான பிரசாரங்களையும், யுத்திகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை கட்சி தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கினார்.
அவரது இந்த அறிக்கையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு குழுவையும் காங்கிரஸ் அமைத்தது. மேலும், பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேருமாறும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் இரு தினங்களுக்கு முன்பு நிராகரித்தார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற பிரசாந்த் கிஷோரிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அப்போது, காங்கிரஸுக்கு தேவையான யோசனைகளையும், ஆலோசனைகளையும் தான் கூறிவிட்டதாகவும், அதனை செயல்படுத்துவதும் செயல்படுத்தாமல் இருப்பதும் அக்கட்சியின் விருப்பம் என்றும் அவர் கூறினார். காங்கிரஸில் சேராதது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், காங்கிரஸுக்கு எந்த பிரசாந்த் கிஷோரும் தேவையில்லை. சொந்தமாக முடிவு எடுக்கும் திறன் அக்கட்சிக்கு இருக்கிறது” என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைமை தொடர்பாக என்ன யோசனை கூறினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “காங்கிரஸ் தலைமைக்கு நான் அளித்த பட்டியலில் ராகுல், பிரியங்காவின் பெயர்கள் இல்லை” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM