ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தொடரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சென் நிலையில்,
சில மணிநேரங்களிலேயே அந்நாட்டின் தலைநகரான் கிவ் நகரில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வியாழன் அன்று (ஏப்ரல் 28) உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு ஐக்கிய நாடுகளின் தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பயணம் மேற்கொண்ட போது ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அவரது பயணத்தின் போது, குட்டெரெஸ், ரஷ்யா உக்ரைன் மீது நடத்தும் போர், 21 ஆம் நூற்றாண்டின் அபத்தம் என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ரஷ்யா கிவ் நகரின் மேற்குப் பகுதியில் நடத்திய இந்த தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தலைநகரில் தாக்குதல் ஏதும் நடத்தப்படாத நிலையில் , இந்த தாக்குதல்கள் முதன்முதலில் நடந்தன. குட்டெரெஸ் புச்சா மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, போரினால் ஏற்பட்ட பாதிப்ப்புகளை பாரவையிட்ட பின்னர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புச்சா நகரில், ரஷ்யா போர்க்குற்றம் செய்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | மரியுபோல் நகரை கைப்பற்றியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
உக்ரேன் வழக்குரைஞர்கள் புச்சாவில் அட்டூழியங்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் 10 ரஷ்ய வீரர்களை விசாரணை செய்து வருவதாகவும். அங்கு ரஷ்ய படைகள் பின்வாங்கிய பிறகு சிவிலியன்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், 8,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்ற வழக்குகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்குகளில் “பொதுமக்களை கொல்வது, குடிமக்களின் உள்கட்டமைப்பு மீது குண்டுவீச்சு, சித்திரவதை” மற்றும் “பாலியல் குற்றங்கள்” ஆகியவை அடங்கும் என்று வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனெடிக்டோவா ஜெர்மன் தொலைக்காட்சி சேனலிடம் கூறினார்.
இதற்கிடையில், உக்ரைனுக்கான 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மிகப்பெரிய உதவி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார். “இந்த போருக்க்கான விலை அதிகம் தான். ஆனால் ஆக்கிரமிப்புக்கு நாம் அனுமதித்தால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று பிடன் கூறினார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் பிடனின் முன்மொழிவை “மிக முக்கிய நடவடிக்கை” என்றும் “அவசியமானது” என்று பாராட்டினார்.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்