தற்போது, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதிகளில் விவசாயிகள், பல ஏக்கர் நிலங்களில் மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். கொல்லிமலையில் மிதமான தட்பவெப்ப நிலை, ஈரப்பதம் அதிகம் உள்ளதால், மிளகு வளர்ச்சிக்கு உதவியாக அமைகிறது. மிளகு விவசாயிகள் உலகத்தரம் வாய்ந்த மிளகுகளை இங்கு சாகுபடி செய்து வருகின்றனர். உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. `கருப்பு தங்கம்’ என அழைக்கப்படும் மிளகானது, கர்நாடகம், கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.
அத்தகைய மிளகுக் கொடிகள் கொல்லிமலையில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், `மிளகுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று விவசாயிகளும், விவசாய முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய, விவசாய முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் மாதேஸ்வரன், “கொல்லிமலையில் அதிகம் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. தரம் வாய்ந்த இந்த மிளகு தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இதர மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாயிகளுக்கு மிளகிற்கான போதுமான ஆதாரவிலைக் கிடைக்கப்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம், மிளகு விவசாயிகள் தாங்கள் பயிர் செய்கின்ற மிளகு நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இடைத் தகர்கள் மிளகை அதிக அளவில் வாங்கி, அவர்கள் உற்பத்தியாளர்களை விட பெரும் லாபம் அடைகிறார்கள். இதனால், உற்பத்தி செய்தவர்களுக்கும், மிளகை வாங்கி உபயோகப்படுத்துபவர்களுக்கும் எந்த ஒரு பயனும் இல்லை. அதனால், அரசுக்கு மிளகு விவசாயிகள் சார்பாக பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். இயற்கை முறையில் விளைவிக்கப்படும், மற்றப் பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்ட கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது அங்கு வாழும் பழங்குடியின விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும்.
அவ்வாறு புவிசார் குறியீடு கிடைத்தால், கொல்லிமலை மிளகுக்கான சந்தை சர்வதேச அளவில் கிடைக்க மிகப் பெரும் வாய்ப்பாக அமையும். எனவே, கொல்லிமலை மிளகுக்கான புவிசார் குறியீடு பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க ஆவன வேண்டும். அதேபோல், கொல்லிமலையில் உள்ள மிளகு விவசாயிகளை காப்பாற்றுவதற்காக, உடனடியாக கொல்லிமலையில் செம்மேடு மற்றும் சோழக்காடு ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் மிளகு ஏல விற்பனை நடக்க, ஏல மையம் அமைக்க வேண்டும். மிளகு விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். மேலும், மிளகு அறுவடைக்கு பின்னர் உரிய முறையில் பதப்படுத்தி, எவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது குறித்து அவர்களுக்கான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மிளகு பதப்படுத்தும் தொழிற்சாலை அடிவாரத்தில் அமைக்கப்படாமல் கொல்லிமலைப்பகுதியின் மேலேயே அமைக்க வேண்டும் என்ற மிளகு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினையும் தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.