கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக இருந்து பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீலகிரி மாவட்ட போலீஸார், சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், சம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில், சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமடைந்தது. காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர், சில மாதங்களுக்கு முன்னர் இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட 210-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த, மரம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரியும், அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவனிடம் போலீஸார் ஏப்.26 அன்று விசாரித்திருந்தனர்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகாலமாக நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் இன்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள, விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 10.15 மணி முதல் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகவும், சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையிலும் பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.