மும்பை,
15வது ஐபிஎல் சீசன் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு நீண்ட காலம் இல்லை என்பதால் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் மோசமான பேட்டிங் இந்திய அணி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 2 டக் அவுட்களும் அடங்கும்.
இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அறிவுரை கூறியுள்ளார். கோலி தனது கடினமான காலத்தை கடந்து வருவது குறித்து பேசிய யுவராஜ் கூறுகையில், “விராட் கோலி நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். அவருடைய ரசிகர்களும் மகிழ்ச்சியாக இல்லை. சதங்களாக விளாசி, கோலி உயர்ந்த பென்ச்மார்க்கை செட் செய்துள்ளார். ஆனால் பெரிய வீரர்களுக்கு இது போன்று நடக்கும்.
விராட் கோலி எதைப்பற்றியும் பெரிதாக யோசிக்காத , கவலைகொள்ளாத மனிதராக மீண்டும் மாறவேண்டும். அவர் இந்த சகாப்தத்தின் சிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் அவரை மாற்றிக்கொண்டால் நிச்சயம் ரன்கள் தொடர்ந்து வரும். ” ,என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.