ஜெனிவா:
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகம். இந்தியா உள்ளிட்ட113 நாடுகளுக்கு பெல்ஜியம் சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஐரோப்பாவில் பெல்ஜியம் சாக்லேட் சாப்பிட்ட 151 குழந்தைகளுக்கு ‘சால்மோனெல்லா’ எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயினால் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த சால்மோனெல்லா நோயின் அறிகுறியாக பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நோய் பரவுவதற்கு தரமற்ற உணவே காரணம் என கூறப்படுகிறது. கெட்டுப்போன உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி ஆகியவற்றின் மூலம் பரவிய இந்த நோய் தற்போது சாக்லேட் மூலம் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.