கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மணப்பாறைக்குச் செல்லும் பிரதான சாலையில் ஏழாவது கி. மீ தொலைவில் உள்ளது அய்யர்மலை. இங்குதான் மிகவும் பிரசித்தி பெற்ற சிவத்தலமான ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற சிவத் தலங்களில் இது முதன்மையானது. சுமார் 4 கி.மீ சுற்றளவு கொண்ட மலையின் உச்சியின்மேல் அமைந்துள்ள இக்கோயிலைச் சென்று சேர 1,017 படிகளை ஏறிக் கடக்க வேண்டும். இந்தக் கோயிலின் எதிரே உள்ள பகுதியில் இக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் அமைந்திருக்கிறது. ரத்தினகிரீசுவரர் கோயிலின் மலைமீது மழை பெய்யும்போது, அந்த மழைநீர் வடிகால் வழியாக இந்தத் தெப்பகுளத்திற்கு வந்து சேரும்.
இந்தத் தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பினால், அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சிறிய வடிகால் வழியாக அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்திற்குச் செல்லும். அய்யர்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மிகவும் வறட்சி நிலவியதால், கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சரியான மழை இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்து வழிந்தோடுவதைப் பார்த்த இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 20 வருடங்களுக்குப் பிறகு, சமீபத்தில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இந்த நிலையில், இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் முகூர்த்தக்கால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், பலரும் ஒன்று கூடி இந்த மண்டபத்தின் முன்பு முகூர்த்தக்காலை ஊன்றினர். இதனைத்தொடர்ந்து, திருவிழா தொடங்கும் நாள் மற்றும் எந்தெந்த நாள்களில் எவ்வகையிலான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்று அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், திருவிழா பத்திரிகை வாசிக்கப்பட்டது.
மேலும், இந்த முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இக்கோயில் குடிபாட்டுக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் நிர்வாகத்தினர், கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்தக் கோயிலின், சித்திரைத் திருவிழா வருகிற 5 – ம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13 – ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.