புதுடில்லி : ‘சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால், அந்த நாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்குவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை’ என, மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் துவங்கியபோது, 2020ல் இந்தியருக்கான விசாக்களை, நம் அண்டை நாடான சீனா ரத்து செய்தது. இதனால், சீனாவில் படித்து வந்த மாணவர்கள் அங்கு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், விசா வழங்க சீனா மறுத்தது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்தவர்களுக்கான சுற்றுலா விசாக்களை ரத்து செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தப் பிரச்னை தொடர்பாக நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது :
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. ஷாங்காய் உள்பட பல நகரங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. நம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, 2020 நவ., முதல் விசா வழங்குவதை சீனா நிறுத்தி வைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்தோருக்கு விசா வழங்குவதற்கான சூழல் தற்போது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement