மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கருப்பு நிற அங்கி அணிய வேண்டாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சில நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்திருந்தார். அப்போது மதுரையில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கருப்பு நிற அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதிபதியிடம் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு நிற அங்கி அணிய வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் பூர்ண ஜெய ஆனந்த், சுற்றறிக்கையில், வழக்கறிஞர்கள் கருப்பு நிற அங்கி அணிய வேண்டியதில்லை. ஆனால் வெள்ளை நிற கழுத்துப்பட்டை, கருப்பு நிற கோட் கட்டாயம் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.