சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு கவர்னர் கெலாட் அறிவுரை| Dinamalar

கலபுரகி:”வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாடு, பாரம்பரியம், கலாச்சாரம், ஒழுக்கத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அனைத்து துறைகளிலும் சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு, இளைய தலைமுறைக்கு உள்ளது,” என, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவுறுத்தினார்.
கலபுரகி பல்கலைக்கழகத்தின் 39 மற்றும் 40வது பட்டமளிப்பு விழா ஒரே நாளில் நடத்தப் பட்டது. கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று, மாணவ – மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஒன்பது பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதில், ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தாலுகா, காணதாலா கிராமத்தை சேர்ந்த பூர்ணிமா என்ற மாணவி, எல்.வி.டி., கல்லுாரியில் முதுகலை கன்னட ஆராய்ச்சி படிப்பு படித்தார். இவருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக 12 தங்க பதக்கம் கிடைத்தது. கன்னட பிரிவில் யாத்கிர் மாவட்டம், சுர்பூர் தாலுகா, முஸ்டூர் கிராமத்தின் தம்மண்ணா ஹனுமந்தா என்ற மாணவர் 10 தங்க பதக்கங்களை வாங்கி குவித்தார்.
விழாவில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:நாடு முழுதும் ஒரே மாதிரியாக பாடத் திட்டம் இருக்க வேண்டும் என்பதாலேயே புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப் பட்டது. இதை கர்நாடகா, முதல் மாநிலமாக அமல்படுத்தியது பெருமை. இதன் மூலம் கல்வி துறையில் பெரும் புரட்சி ஏற்படும்.
பணம், சொத்து, பொருட்களை திருட முடியும். கற்ற அறிவை யாராலும் திருட முடியாது. பட்டம் பெற்ற மாணவர்கள், தங்கள் அறிவை பயனுள்ளதற்கு பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.அறிவை தந்த தந்தை, தாய், குரு, நாட்டை என்றும் மறக்க கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாடு, பாரம்பரியம், கலாசாரம், ஒழுக்கத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அனைத்து துறைகளிலும் சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு, இளைய தலைமுறைக்கு உள்ளது.
இந்தியா அதிக இளைஞர்கள் கொண்ட நாடு.அவர்கள் மூலம் நாடு பலவற்றை எதிர்பார்க்கிறது. கடந்த முறை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், ஏழு பதக்கங்கள் வெற்றி வெள்ள முடிந்தது. பாரா ஒலிம்பிக்கில், 19 பதக்கங்கள் வென்றோம். படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவுக்கு விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.