சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் நாளை (ஏப்.30) ஈடுபடப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து நாளை (ஏப்.30) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி என்பதைவிட படிப்பு தடுப்பு கல்விச் சட்டம் எனலாம். என்இபி (NEP) என்பது நேஷனல் எஜுகேஷன் பாலிசி (National Education Policy) அல்ல, நோ எஜுகேஷன் பாலிசி(No Education Policy). ராஜாஜியின் பழைய குலக்கல்வித் திட்டத்தைத் தான் மீண்டும் தேசிய புதிய கல்வித்திட்டம் என அறிமுகம் செய்கின்றனர். தாய்மொழிக்கு முக்கியத்துவம் எனக் கூறி 3-வது மொழியாக சம்ஸ்கிருதம், இந்தியை பரப்ப வேண்டும் என்பதுதான் திட்டம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இருக்கிறது” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.