TN Police to seizes Ganja and Gutkha traders assets and bank accounts: கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையின் மூலம் வாங்கிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல், கஞ்சா மற்றும் குட்காவுக்கு எதிரான நடவடிக்கையாக ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0. நடந்து வருகிறது. ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த நடவடிக்கைகளில், தமிழ்நாடு காவல்துறை இதுவரை மாநிலம் முழுவதும் 2,423 கஞ்சா வியாபாரிகளை கைது செய்துள்ளது மற்றும் 3,562 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
இதே கால கட்டத்தில் 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றும் 45 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நடவடிக்கையின் போது 113 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தநிலையில், கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையின் மூலம் வாங்கிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
கஞ்சா மட்டும் குட்கா வியாபாரிகளுக்கு எதிராக, அவர்களது வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கும் உத்தியை போலீசார் பயன்படுத்துவது இதுவே முதல் முறை.
இது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், “சில மாவட்டங்களில் நாங்கள் ஏற்கனவே இந்த நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம், மேலும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் அனைத்து காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: சென்னையில் கஞ்சாவுடன் சிக்கிய கல்லூரி மாணவர்கள்… தூண்டில் போட்டு வியாபாரியை தூக்கிய போலீஸ்!
இதன்படி, திண்டுக்கல்லில் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கிக் கணக்குகளை முடக்கிய போலீஸார், மூன்று கஞ்சா வியாபாரிகளின் 6 சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். மதுரையில் 29 வங்கிக் கணக்குகளை முடக்கிய போலீஸார், ஏழு கஞ்சா வியாபாரிகளின் 4 சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் தேனியில் 6 கஞ்சா வியாபாரிகளின் 8 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.