டெல்லி பா.ஜ.க பிரிவு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசிடம் 40 கிராமங்களின் பெயர்களை மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா நேற்று செய்தியாளர்களிடம், “முகலாயர் காலப் பெயர்கள் கொண்ட 40 கிராமங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் தியாகிகள் பெயர்களை சூட்ட வேண்டும்.
முகலாயர் காலத்தின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். டெல்லி இனி சராய் (சத்திரம்) அல்ல. இது நாட்டின் தேசிய தலைநகரம். இளைஞர்களும் கிராம மக்களும் அவர்களின் கிராமங்கள் அடிமைத்தனத்தின் அடையாளமாக அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று அகில பாரத இந்து மகாசபா மற்றும் சாந்த் மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி, “டெல்லியின் பெயரையே இந்திரபிரஸ்தா என்று மாற்ற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வலியுறுத்துகிறேன்.
இது தொடர்பாக எனது அமைப்பினால் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். மேலும், டெல்லியின் பழைய பெயர் இந்திரபிரஸ்தம் தான். மகாபாரதத்தில் கூட இந்த நகரம் இந்திரபிரஸ்தம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. `இந்திரப்பிரஸ்தம்’ என்றால் அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் இந்திரனின் ராஜ்ஜியம் என்று பொருள்” எனக் கூறினார்.