கீவ்:
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் தொடர்ந்து 65-வது நாளாக நடைபெற்று வருகிறது.
ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் வீழ்ந்தன. இருப்பினும் உக்ரைனின் தலைநகரான கீவ்வை பிடிப்பதற்கு ரஷியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக கீவ் நகரத்தின் அருகில் உள்ள தெமிடிவ் கிராமம் ஒன்றை ரஷிய ராணுவம் பிடிக்க முயற்சி செய்தது. கிராமத்திற்குள் டாங்கிகளுடன் வந்த ரஷிய படைகளை தடுக்கும் முயற்சியில் அந்த கிராமத்தினர், அருகில் இருந்த நீர்நிலைகளை தகர்த்து கிராமம் முழுவதையும் வெள்ளத்தில் மூழ்க வைத்தனர்.
இதனால் ரஷிய படைகள் கிராமத்திற்குள் செல்ல முடியாமல் வேறு திசை நோக்கி சென்றனர்.
வெள்ளத்தால் அந்த கிராமத்தின் கட்டமைப்பே பாதிக்கப்பட்டிருந்தாலும், எண்ணிக்கையில் அடங்காத ரஷிய படைகளிடமிருந்து கீவ் நகரத்தையும், தாய் நாட்டையும் காப்பாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட சிறிய விலை என்றே உக்ரைன் மக்கள் கூறுகின்றனர்.