தாமதமாக வந்த மணமகன்- வேறொருவரை கரம் பிடித்த மணமகள்…

புனே:

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22ந்தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது.  இதற்காக மாலை 4 மணி நல்ல நேரம் என குறிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அன்றைய தினம் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டன.  மாலை ஆனதும் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகனின் வருகைக்காக திருமணம் நடக்கும் மண்டபத்தில் காத்திருந்து உள்ளனர்.

ஆனால், மணி 4, 5 என எட்டை எட்டியது.  மணமகன் வந்து சேரவில்லை.  இதனால், மணமகள் குடும்பத்தினர் பொறுமையிழந்து காணப்பட்டனர்.

அந்த பக்கம் மணமகன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார்.  நண்பர்களும் குடிபோதையில் திளைத்து இருந்துள்ளனர்.

இதன்பின்பு, போனால் போகட்டும் என்று 8 மணிக்கு மண்டபத்திற்கு தனது நண்பர்கள் பட்டாளத்துடன் மணமகன் வந்து சேர்ந்துள்ளார்.  வந்த பின்பும் மணமகன் தோரணையை மட்டும் அவர் விடவில்லை.  மணமகள் குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார்.

இதனையெல்லாம் கவனித்த மணமகளின் தந்தை, மணமகனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார்.  திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில், திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தனது மகளை மணமுடித்து வைத்துள்ளார்.

இதுபற்றி மணமகளின் தந்தை கூறும்போது, ஏப்ரல் 22ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.  மணமகன் குடும்பத்தினர் நடனம் ஆடுவதில் பிசியாக இருந்தனர்.  4 மணிக்கு திருமணம் நடைபெற வேண்டும்.  ஆனால் அவர்கள் வந்தது 8 மணிக்கு.  அதனால், எனது மகளை என்னுடைய உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.