நண்பர்களுடன் மது அருந்திவிட்டு திருமணத்துக்கு தாமதமாக வந்த மாப்பிள்ளையால் கோபமடைந்த மணமகளின் தந்தை, தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இரு வீட்டாரும் பரபரப்பாக திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சரியாக 3.30 மணிக்கெல்லாம் பெண் வீட்டார் மணமகளை அலங்கரித்து மேடைக்கு அழைத்து வந்துவிட்டனர்.
பின்னர், மாப்பிள்ளையை அழைத்து வருமாறு புரோகிதர் அழைக்க, உறவினர்கள் அனைவரும் மாப்பிள்ளையை தேடி மண்டபம் முழுவதும் சுற்றி வந்தனர்.ஆனால், மாப்பிள்ளை கிடைத்தபாடில்லை.
அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது இதையடுத்து, மணமகனின் நண்பருக்கு போன் செய்தபோது, மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு உற்சாகமாக ஆடி பாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இந்த விஷயம் தெரியவந்ததும் பெண்ணின் தந்தைக்கு ஆத்திரம் வந்துள்ளது. இருந்தபோதிலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மாப்பிள்ளையை சீக்கிரம் வர சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார். முகூர்த்த நேரம் முடிந்து மணி ஐந்தானது, ஆறானது, ஆனால் மாப்பிள்ளை மட்டும் வரவே இல்லை.
பின்னர், சாவகாசமாக 8 மணிக்கு தனது நண்பர்கள் புடைசூழ மாப்பிள்ளை மண்டபத்துக்கு வந்திருக்கிறார். அதுவரை அமைதியாக இருந்த பெண்ணின் தந்தை, மாப்பிள்ளை மேடையில் ஏறும்போது அவரை தடுத்து நிறுத்தினார்.
பிறகு, தனது உறவினரின் மகன் ஒருவரை அழைத்து தனது மகளை திருமணம் செய்து கொள்ள விருப்பமா எனக் கேட்டார். அவரும் சம்மதிக்கவே, உடனடியாக அதே மேடையில் தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவையனைத்தும் மணமகன் மற்றும் அவரது வீட்டாரின் கண் முன்பாகவே நடந்து முடிந்தது. ஆனால், மணமகன் மீது தவறு இருந்ததால் அவர்களால் எதுவும் பேச முடியாமல் திகைத்து நின்றனர்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை கூறுகையில், “எப்போதாவது மது அருந்துவதில் தவறு இல்லை. ஆனால், தனது திருமணத்துக்கே தாமதமாக வரும் அளவுக்கு ஒருவர் குடித்தால் அவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார் என அர்த்தம். அதுபோன்ற ஒரு நபருக்கு எனது மகளை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. எனவேதான், இந்த முடிவை எடுத்தேன். நல்ல வேளை, திருமணத்துக்கு முன்பாகவே மணமகன் குறித்து தெரியவந்ததால் எனது மகளின் வாழ்க்கை தப்பித்தது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM