பெங்களூரு:பெங்களூரில் நடந்து வரும் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளில், நீச்சல் போட்டியில் மகளிர் பிரிவில் சென்னை பல்கலை சாம்பியன் பட்டத்தை வென்றது.
‘கேலோ இந்தியா’ நீச்சல் போட்டியில், 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில், அண்ணா பல்கலையை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தங்க பதக்கத்தையும்; 100 மீட்டர் மிட்டலி பிரிவில், தனுஷ், ரோஹித், ஆதித்யா, பெனு ஹெனன் ஆகிய நால்வர் தங்க பதக்கம் வென்று மிகவும் விரைவாக இலக்கை எட்டினர்.
மேலும், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவிலும், 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவிலும் தனுஷுக்கு தங்க பதக்கமும்; 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஆதித்யாவுக்கு மற்றொரு தங்க பதக்கமும், 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெண்கலமும் கிடைத்தது.மேலும், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவு, 200 மீட்டர் மிட்டலி பிரிவுகளில் ரோஹித்துக்கு வெள்ளியும்; 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெண்கலமும்; 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் யாதேஷுக்கு வெண்கலமும் கிடைத்தது.
இது மட்டுமின்றி, 100 கிலோ பிரிவில், விக்னேஷ் என்ற மாணவர் தங்க பதக்கம் பெற்றார். நீச்சல் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. மொத்தத்தில் நீச்சல் போட்டி மகளிர் பிரிவில் அதிக பதக்கங்களுடன் சென்னை பல்கலை சாம்பியன்ஷிப் பட்டத்தையும், அண்ணா பல்கலை ஆடவர் பிரிவில், ரன்னர் அப் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது.
சென்னை பல்கலை மகளிர் பிரிவினர் 4 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களும்; அண்ணா பல்கலை ஆடவர் பிரிவினர், 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களும் வென்றது குறிப்பிடத் தக்கது.
பெற்றோர் குமுறல்
‘ஒருவருக்கு மாதந்தோறும் நீச்சல் பயிற்சிக்கு 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.உடை, உணவு உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. நடுத்தர வர்க்கத்தினர் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். ‘அரசு தரும் ஊக்க தொகை மிகவும் குறைவாக உள்ளது. திறமை இருந்தும் நிதி பற்றாக்குறையால் பலர் விளையாடுவதற்கு முன்வர தயங்குகின்றனர். எனவே முழு செலவையும் அரசே ஏற்றால், தமிழகத்துக்கு வீரர், வீராங்கனையர் பதக்கங்களை குவிப்பர்’ என, வீரர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
Advertisement