சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனி நபர் ஒருவர் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கால்வாயை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்கள்.

அதே சமயத்தில், “ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பது போன்று ஆகிவிடும். ஆந்திரா முதல் புதுச்சேரி வரை முக்கிய நீர் வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்பாளர்களால் பாழடைந்து காணப்படுகிறது. இந்த கால்வாயை அழகுபடுத்தினால், சென்னை நகரமும் அழகாகும். இதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது” என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.
பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை அடுத்துள்ள கோவிந்தசாமி நகர்ப் பகுதியில் கால்வாயை ஒட்டியிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள 259 ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

முதற்கட்டமாக அந்தப் பகுதியிலிருக்கும் வீடுகளில் உள்ள பொருள்களை எடுத்துச் செல்லுமாறு அங்கு வசிக்கும் மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு, “நீண்டகாலமாக நாங்கள் இந்தப் பகுதியில்தான் வசித்து வருகிறோம். திடீரென காலிசெய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வது” என்று அந்தப் பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து அந்தப் பகுதியில் 500-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.