பிரதமர் திட்டம்; காங்கிரஸை கைப்பற்ற நினைத்து, தோல்வியடைந்த பிரசாந்த் கிஷோர்?! – பகீர் பின்னணி

இந்திய அரசியல் அரங்கில் கடந்த சில வாரங்களாக, பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம்தான் `பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரவிருக்கிறார்’ என்பது! ஆனால் பின்னர், காங்கிரஸ் கட்சியின் அழைப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகவே பரபரப்பு மெல்ல அடங்கிப்போனது. இந்தநிலையில், இந்த நிகழ்வுக்குப் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் விளையாட்டை பிராசாந்த் கிஷோர் விளையாடியிருக்கிறார் என்ற அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தொடர் தோல்விகளால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்துவந்த காங்கிரஸ் ஜி-23 மூத்த தலைவர்கள், கட்சியை மறுசீரமைக்கவேண்டும், கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து நேரு குடும்பம் விலகியிருக்க வேண்டும் என்றெல்லாம் போர்க்கொடி உயர்த்தினர். அதைத்தொடர்ந்து கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டது. தோல்விக்கு பொறுப்பேற்று ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் பதவி விலக அறிவுறுத்தப்பட்டனர். மேலும், மீண்டும் சோனியா காந்தியே கட்சியின் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. “கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களை கொண்டுவரவும், எதிர்காலத் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல்கள் குறித்த முக்கிய முடிகளையும் சோனியா காந்தி எடுப்பார்” என காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

`கொக்கொக்க கூம்பும் பருவத்து’ வந்த கிஷோர்:

இந்த தருணத்திற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன் என்பதுபோல, காங்கிரஸ் கூடாரத்துக்குள் மீண்டும் தனது காலடியை எடுத்துவைத்தார் பிரசாந்த் கிஷோர். சோனியா காந்தியை நேரில் சந்திந்து, காங்கிரஸ் கட்சிக்கு என்னெவெல்லாம் பலவீனங்கள், அவற்றை எப்படியெல்லாம் சரிசெய்வது, எந்தமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவருவது உள்ளிட்ட தேர்தல் வியூகங்கள், கட்சி மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து முழு டேட்டாவும் தன்னிடம் இருப்பதாகவும், இவற்றைச் செய்தால் 2024-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பேசினார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த காங்கிரஸ் தலைமைக்கு பிரசாந்தின் வார்த்தைகள் நம்பிக்கையைக் கொடுத்தன. தொடர்ந்து மூன்று நாள்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராகுக் காந்தி, பிரசாந்த் கிஷோர்

சுமார் 600 பக்க பவர்பாயிண்ட் ப்ரசன்டேஷனை விளக்கிய கிஷோர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பலவீனங்கள் என்ன, 11 மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்ன, எந்தெந்த மாநிலங்களில் தனித்தும், கூட்டணி வைத்தும் தேர்தலில் போட்டியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தெளிவு படுத்தினார். ஆனால்..!?

பிரசாந்த் கிஷோர்

கிஷோர் போட்ட கன்டிஷன், கிரங்கிப்போன காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களாக பிரசாந்த் கிஷோர் சொன்ன விஷயங்கள் சோனியாகாந்தி உள்ளிட்ட முக்கியத்தலைவர்களே ஆமோதிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆனால், அவற்றை சரிசெய்ய கிஷோர் சொன்ன யுக்திகள்தான் காங்கிரஸ் தலைமையையே ஆட்டம் காணவைத்தது என்கிறார்கள்.

காங். தலைமைக்கு ஷாக்:

“காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடரலாம். ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற குழுத்தலைவர் பொறுப்பைக் கொடுக்கலாம். நேரடி நிர்வாகி போன்று அல்லாமல், கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு செயலாளர் போன்ற புதிய பதவியை பிரியங்கா காந்திக்கு உருவாக்கிக்கொடுக்கலாம். ஆனால், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் முழு நேர செயல்தலைவராக நியமிக்க வேண்டும். அவரிடமே கட்சி விவகாரங்கள், அன்றாட செயல்பாடுகளை கவனித்துக்கொள்ளும் சுதந்திரத்தை கையளிக்க வேண்டும். அதேபோல, யு.பி.ஏ கூட்டணித் தலைவராக ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரையும் நியமிக்கலாம். இதன்மூலம் குடும்ப அரசியல் என்ற பிம்பத்தை உடைக்கலாம்” என நேரு குடும்பத்திற்கே ஷாக் கொடுக்கும்படியான பரிந்துரைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கியிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்

தனக்கு அதிக அதிகாரம்:

காங்கிரஸில் நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தை குறைக்க லாவகமாக காய் நகர்த்திய பிரசாந்த் கிஷோர், தனக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான கண்டிஷன்களையும் அடுக்கியிருக்கிறார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தகவல் தொடர்புகள் அனைத்தும் ஐ-பேக் குழுவிடம்தான் இருக்க வேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் சார்பில் எந்த தொகுதியில், யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற அதிகாரமும் தங்களுக்கு இருக்க வேண்டும். மேலும், எதிர்வரும் குஜராத், ம.பி., இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கவேண்டும். மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தனது குழுவே மேற்கொள்ளும். இவற்றையெல்லாம் நிர்வகிக்க, கட்சியில் தனக்குரிய பதவியையும், அதிகாரத்தையும் கொடுத்தால், திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளை முறையாகச் செய்து அனைத்தையும் சாத்தியமாக்குவதாக அடித்துப்பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

சோனியா காந்தி – ராகுல் காந்தி

அந்த நிலையில், கிஷோரின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யவும், பரிந்துரைகள் குறித்த கருத்துகள் சந்தேகங்களையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய கட்சியின் மூத்தத் தலைவர்கள் அடங்கிய குழுவை சோனியாகாந்தி நியமித்தார். இதுசம்மந்தமான ஆய்வுமேற்கொண்ட சிறப்புக்குழு தனது இறுதி அறிக்கையை சோனியா காந்தியிடம் சமர்ப்பித்தது.

அதில், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைக்கு உடன்படவில்லை; மேலும், பிரசாந்த் கிஷோர் சொல்வதையெல்லாம் செய்தால் காங்கிரஸ் காரியக்கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஓரங்கட்டப்படும். பிரசாந்த் கிஷோரின் ஆதிக்கமே மேலோங்கும். ஒருவேளை காங். வெற்றிபெற்றால்கூட அது பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கப்படும் என அச்சம் தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், சில தலைவர்கள் கிஷோரின் பரிந்துரைக்கு ஆதரவு நிலைப்பாட்டிலும் இருந்திருக்கின்றனர். மற்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுப்பதை விட்டுவிட்டு, முழுமையாக காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

ராகுல்காந்தி

ராகுலுக்கு கிளம்பிய சந்தேகம்:

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை காதுகொடுத்து கேட்டும், அவற்றை பரிசீலிக்கும் முடிவிலும் கூட சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் இருந்தார்கள். ஆனால், தொடக்கம் முதலே ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைக் கூட்டத்திருந்து ஒதுங்கியே இருந்திருக்கிறார். காரணம், பிரசாந்த் கிஷோரின் பின்னணியில் பா.ஜ.க இருக்கலாம் என்ற சந்தேகமும், பின்னாளில் கிஷோர் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடலாம் எனவும் முன் யோசனையில் இருந்தாதாக ராகுலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் கசியவிட்டு வருகின்றனர். ராகுல் ஆதரவு தலைவர்களும் பிரசாந்த் கிஷோர் மீது நம்பகத்தன்மை இல்லாமல், ஒருவித சந்தேகக் கண்ணோட்டத்துடனே பார்த்து வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்

இணைய மறுத்தாரா… மறுதலிக்கப்பட்டாரா?

பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்தது போல காங்கிரஸ் தலைமை முழுமையான ஒத்திசைவு வழங்கவில்லை. காங்கிரஸில் இணைத்துக்கொள்ள விரும்பினாலும், பிரசாந்த் கிஷோருக்கு உயரிய பதவி வழங்குவது, கண்டிஷன்களை ஏற்பது உள்ளிட்டவை குறித்து மூத்தத் தலைவர்கள் அடங்கிய காரிய கமிட்டியே முடிவெடுக்கும் என கைவிரித்துவிட்டது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே, தெலங்கானா மாநில தேர்தலில் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை தான் முன்னர் தலைமை வகித்த ஐ.பேக் நிறுவனத்துக்கு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். இதனால், தெலங்கானா மாநில காங்கிரஸ் உள்பட தேசிய காங்கிரஸ் தலைவர்களும் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர். இந்த அதிருப்தியில்தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்.

`நன்றி’ சொல்லி எஸ்கேப் ஆன காங்; சமாளித்த கிஷோர்:

அந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா “பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டார். இருந்தாலும், அவர் கட்சிக்கு கொடுத்த ஆலோசனைகளுக்காக மிகுந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!” என மேலோட்டமாகக் கூறினார்.

ரன்தீப் சுர்ஜிவாலா

அதன்பிறகு கட்சியில் இணையாதது குறித்து விளக்கமளித்த பிரசாந்த் கிஷோர், “காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்ற அந்தக் கட்சி கொடுத்த ஆஃபரை நான் நிராகரித்து விட்டேன். காங்கிரஸில் நான் இணைவதைக்காட்டிலும், அந்தக் கட்சி தன்னுடைய கட்டமைப்பு பிரச்னைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியம். காங்கிரஸுக்கு தலைமையும், ஒருங்கிணைப்பும்தான் தேவை!” என பதிலளித்து சமாளித்தார்.

நிதிஷ் – பிரசாந்த் கிஷோர்

பி.கே-வின் பி.எம் ஆசை:

முன்பு காங்கிரஸ் கட்சியையும், தலைமையையும் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர், திடீரென காங்கிரஸ் கட்சியின் மீது அதீத அக்கறை கொண்டு செயல்படுவதற்குக் காரணம், பிரசாந்த் கிஷோரின் பிரதமர் ஆசைதான் என அரசியல் நோக்கர்கள் சிலர் பகீர் கிளப்புகின்றனர். “ஏற்கெனவே, கடந்த 2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில், பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்த நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றது. அதன்பிறகு, பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து துணைத்தலைவரானார். ஆனால், கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கிஷோர் கட்சியிலிருந்து வெளியேறினார். இதற்குக்காரணம், கட்சியின் தலைமைப் பொறுப்பை குறிவைத்து பிரசாந்த் கிஷோர் செயல்பட்டதுதான் என கூறப்படுகிறது.

அதேபோல, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்துக்கொண்டே, மம்தாவுக்கு எதிராக, மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியை வளர்த்துவிட்டு, கட்சியை அவரின் அதிகாரத்துக்குள் கொண்டுவர முயற்சி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரசாந்த் கிஷோர் – மம்தா

தொடர்ந்து பஞ்சாபிலும் காங்கிரஸ் கட்சியை சிதைக்க, சித்துவை வைத்து சித்து விளையாட்டு காட்டிய பின்னணியிலும் பிரசாந்த் கிஷோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டே, காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான முயற்சிகளில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டார். ஆனால், அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களின் ஜி-23 குழுவின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைக்கூடாமல் போனது.

பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் கட்சி 5 மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரசாந்த் கிஷோர், மீண்டும் காங்கிரஸ் நோக்கி அடியெடுத்து வைக்க முயன்றிருக்கிறார். அவரின் நோக்கம் காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்; தனது ஆதிக்கத்தின்கீழ் கட்சியைக் கொண்டுவந்து, காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக மாற வேண்டும். ஏற்கனவே மாநில அளவில் பலம் வாய்ந்த கட்சிகளாக இருக்கும் திமுக, மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சிகளுக்கு பணியாற்றியும்/பணியாற்றவும் இருப்பதால், அவர்களின் உதவியுடன், காங்கிரஸையும் ஒரே புள்ளியில் இணைத்து விட்டால் தனது கனவு சாத்தியமே என திட்டமிட்டார் பி.கே” என பகீர் செய்திகள் உலா வருகின்றன. காங்கிரஸை இணைக்கமுடியாத சூழலில் பி.கே-வின் அடுத்த திட்டம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.