திம்பு,
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக பூடான் வந்தடைந்தார். பூடான் வந்தடந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பில், இந்தியா மற்றும் பூடான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஆக்கப்பூர்வமான பயணத்தை எதிர்நோக்குவதாகவும் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில், மீண்டும் பூட்டானுக்கு வந்ததில் மகிழ்ச்சி என டுவீட் செய்து, இங்கு வந்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பூடானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உயர்மட்ட பயணங்களை வழக்கமாக பரிமாறிக்கொள்ளும் நீண்டகால பாரம்பரியத்திற்கு இணங்க இந்த பயணம் உள்ளது என்று பூடான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெய்சங்கர், பூடான் பிரதமர் லியோன்போ டான்டி டோர்ஜியின் அழைப்பின் பேரில் பூட்டானுக்கு வந்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பும் பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகள், வரவிருக்கும் உயர்மட்ட பரிமாற்றங்கள், பொருளாதார மேம்பாடு மற்றும் நீர்-மின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.