பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீயை அணைக்கும் பணி நாளை முடிவடையும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் நிகழ்ந்த தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட புகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தோட்டக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் மையம் அமைந்துள்ள  இடத்தில் கடந்த 27 ஆம் தேதி மதியம் சுமார் 3 மணி அளவில் தோட்டக் கழிவுகளில் தீப்பற்றி எரிந்தது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 15 ஏக்கர் அளவிற்கு இந்த தீ பரவியது. 

தீப்பற்றிய உடனே தீயணைப்பு துறையினருக்கு அந்த வளாகத்தில் உள்ள அலுவலர்களால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்று இரவே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக தீயணைப்புத் துறையின் சார்பில் தீயனைப்பு வீரர்கள் 120 நபர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 100 நபர்கள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பணியாளர்கள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டனர். 

தீயணைப்புத் துறையின் சார்பில் 12 தீயணைப்பு வாகனங்களும், இரண்டு ஸ்கை லிஃப்ட் என்று சொல்லப்படும் மிக அதிக உயரத்திற்கு சென்று அங்கிருந்து தீயை அணைக்கும் அதிநவீன இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து நேற்று மாலை வரை 280 நடை தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 தண்ணீர் டேங்கர் லாரிகளும், 6 ஜெட்ராடிங் வாகனங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தானது 27ஆம் தேதி இரவு பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

28ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களும், மேயர்  திருமதி ஆர்.பிரியா அவர்களும் தீயனைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

அதுசமயம் அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் குப்பைகளிலிருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த குப்பைகளின் மீது மணலை பரப்பவும், பெருங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்கவும் உத்தரவிட்டார்கள்.  

அதனடிப்படையில், இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஜே.சி.பி., பொக்லைன் போன்ற 22 வாகனங்களின் உதவியோடு சுமார் 100 யூனிட் மணல் குப்பைகளின் மீது பரப்பப்பட்டு புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 15 ஏக்கர் அளவிற்கு தீ விபத்து ஏற்பட்டு தற்பொழுது எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக 3 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே புகை வெளியேறி வருகிறது.

இந்த இடங்களிலும் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புகையானது முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

குப்பைகளிலிருந்து வரும் புகை மூட்டத்தால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பெருங்குடி, தரமணி, வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் ஆகிய நான்கு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.