சென்னை: 3 நாட்களாக தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து வந்த பெருங்குடி குப்பை கிடங்கு தீ கட்டுக்குள் வந்தது என நேரில் பார்வையிட்ட மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறினர்.
பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த புதன்கிழமை மாலை தீ பிடிக்கத் தொடங்கியது. இந்த தீயானது குப்பை கிடங்கு ழுழுவதும் பரவியது. அங்கு லட்சக்ணக்கான டன் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதால் எரிந்துவரும் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இதனால் எழுந்த கரும்புகையானது, தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களிடையேயும் சுவாச பிரச்சினையை எழுப்பியது.
தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 300 பேர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,. 3 நாட்களுக்குப் பிறகு தீ கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பல அடி ஆழத்துக்கு சென்றுள்ள தீ கங்குகளால் புகை வெளியேறி கொண்டிருக்கிறது.
தீ விபத்து நடைபெற்ற பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர்ககன்தீப்சிங் பேடி, தென்எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, 9வது மண்டலம் முதல் 15வது மண்டலம் வரை சேகரிக்கப்படும் குப்பைகள் மறு சுழற்சிக்கு பிறகு இங்கு கொட்டப்படுகிறது. இந்த வளாகத்தில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடியும் என்றார்.
குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ந்து வெளியேறும் புகையால் சுற்றுப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலருக்கு கண்கள் சிவந்து வீங்கி உள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி, தரமணி ஆகிய 4 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருங்குடி குப்பை கிடங்கில் தீ மேற்கொண்டு பரவாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில் 5 ஏக்கரில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, குளிரூட்டும் பணி நடந்து வருகிறது. 12 தீயணைப்பு வாகனங்கள், 120 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ பரவிய பகுதிகள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அணைக்கப்பட்டு வருகிறது என விளக்கமளித்தது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மேயர் திருமதி ஆர்.பிரியா, அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி. இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் .சி.விஜயராஜ் குமார், இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் அவர்கள், திரு.வி.இ.மதியழகன் அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.