புல்தானா (மஹாராஷ்டிரா): திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், அதே முகூர்த்தத்தில், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்கார பையனுக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர். இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்த நிலையில், மணமகன் அவரது நண்பர்களுடன் குடித்து விட்டு தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இரவு 8 மணிக்கு மண்டபத்திற்கு போதையில் வந்த மணமகனும் அவரது நண்பர்களும் மணமகள் வீட்டாரிடம் சண்டையிட்டுள்ளனர். அப்போது மணப்பெண்ணின் தாயார் “எங்கள் மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் வெகு நேரமாக மணமகன் வராததால், உறவினருடன் பேசி திருமணத்திற்கு வந்திருந்த வேறு பையனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதுகுறித்து மணமகளின் தந்தை கூறும் போது, “எனது மகளுக்கு ஏப். 22ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், மாலை 4 மணி நிகழ்ச்சிக்கு மணமகன் 8 மணி வரை வரவில்லை. நண்பர்களுடன் நடனமாடி கொண்டாட்டத்தில் இருந்துள்ளார். எனவே எனது மகளுக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து வைத்தேன்” என்றார்.