புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணத்தை ‘அரங்கேற்றம்’ என்று விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாகிஸ்தான் பிரதமர் பயன்படுத்திய ஸ்டேஜ்ட் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை அவர், பிரதமர் காஷ்மீருக்கு வராமலேயே வந்ததுபோல் சொல்லப்பட்டது எனக் கூறுகிறாரோ. அப்படியென்றால் அவரது புரிதல் தவறு. காஷ்மீரில் அவருக்குக் கிடைத்த வரவேற்பை பாகிஸ்தான் பிரதமர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காஷ்மீரில் பிரதமர் தொடங்கிவைத்த நலத்திட்டங்கள் தான் அவரது பயணத்திற்கு சாட்சி. இந்திய விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
பிரதமரின் முதல் பயணம்: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜம்மு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அவர், சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஜம்முவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள பாலி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பாலி கிராமத்தில் மத்திய அரசின் ‘கிராம உர்ஜா ஸ்வராஜ்’ திட்டத்தின் கீழ் ரூ.2.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், “இந்த முறை பஞ்சாயத்து ராஜ் தினம், ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுகிறது. இது மிகப் பெரிய மாற்றத்தை குறிக்கிறது. ஜனநாயகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துள்ளது பெருமையான விஷயம். அதனால் தான், இங்கிருந்து நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளுடன் கலந்துரையாடுகிறேன். இந்த யூனியன் பிரதேசம் புதிய வளர்ச்சி கதையை எழுதப் போகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் பல கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். உங்கள் வாழ்க்கையில் அதுபோன்ற கஷ்டங்கள் ஏற்படாது. அதை உங்களுக்கு நாங்கள் நிரூபிப்போம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் காஷ்மீர் பயணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார். இந்தப் பயணமே ஒரு நாடகம் போல் அரங்கேற்றப்பட்டது என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.