போபால்: மத்தியப் பிரதேசத்தில் அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு எதிர்க்கட்சி தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து கமல்நாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘உங்களது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக உங்களது பங்களிப்பை, காங்கிரஸ் கட்சி முழு மனதுடன் பாராட்டுகிறது. மேலும், மத்தியப் பிரதேசத்தின் எதிர்க்கட்சி தலைவராக கோவிந்த் சிங்கை நியமிக்கவும், காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரான கோவிந்த் சிங் மத்தியப் பிரதேசம் லஹர் தொகுதி எம்.எல்.ஏ ஆவார்.
எனினும் கமல்நாத் கட்சியின் மாநில தலைவர் பதவியில் தொடர்கிறார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.