சிட்னி:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பணக்காரர் ஆண்ட்ரூ ட்விக்கி பாரெஸ்ட், அவரது மனைவி நிக்கோலா. அந்நாட்டின் 2வது பணக்கார குடும்பம் ஆகும்.
இந்த நிலையில் ஆண்ட்ரூ ட்விக்கி-நிக்கோலா தம்பதி, சொத்துக்களுக்கு தங்களது பிள்ளைகள் வாரிசாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர். அவர்களின் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
அவர்களது சொத்து உள்நாட்டு ஆதரவு, கல்வி மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிக்கோலா கூறும்போது, ‘எங்களின் பிள்ளைகளான கிரேஸ், சோபியா, சிட்னி ஆகியோர் இவ்வளவு பெரிய செல்வத்தால் சுமையுடன் வாழ விரும்பவில்லை. நாங்கள் ஒரு வீட்டில் வாழ்கிறோம். எனக்கு ஒரு சிறந்த வாழ்க்கை இருக்கிறது.
வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதை பணத்தால் வாங்க முடியாது. பிள்ளைகள் பெரும் தொகையை மரபுரிமையாக பெறப்போகிறோம் என்று நினைப்பதால் பயனில்லை” என்றார்.
ஆண்ட்ரூ ட்விக்கி கூறும் போது, ‘தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் பொருட்களை தவிர எல்லாவற்றையும் கொடுக்கும் முடிவு எளிதானது. நாம் செல்வந்தராக சாகக்கூடாது அதனால் என்ன பயன்?’ என்றார்.