மகாராஷ்டிராவில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், வன்முறையால் இங்கு யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றும், வன்முறையை விரும்பும் சமுதாயம் தற்போது அதன் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பங்கேடாவில் நடைபெற்ற ‘கடினாஷினி’ எனும் விழாவில் தலைமை விருந்தினராக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், சிந்தி சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோரும் பங்குபெற்றனர். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “இந்தியா ஒரு பல மொழி பேசும் நாடு, இங்கு ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது. இந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, வேறு எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, அது சமூகத்தின் அழுத்தத்தின் அடிப்படையிலே செயல்படுகிறது.
சமூக அழுத்தம் என்பது அரசாங்கத்துக்கு பெட்ரோலைப் போன்றது. சிந்தி பல்கலைக்கழகம் என்ற உங்கள் கனவை நீங்கள் நனவாக்க விரும்பினால், இந்த அரசாங்கத்துக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய மோகன் பகவத், “வன்முறையால் இங்கு யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல், வன்முறையை விரும்பும் சமுதாயம் தற்போது அதன் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. எனவே, நாம் எப்போதும் வன்முறையற்றவர்களாகவும், அமைதியை விரும்புபவர்களாகவுமே இருக்க வேண்டும். அதற்கு முக்கியமாக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து, மனிதநேயத்தைக் காப்பது அவசியம்” என்று கூறினார்