வரி விதிப்பு நடைமுறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்- குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

நாக்பூர்:
நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகளின்  74-வது பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு , அதிகாரிகளுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தாமாக வரி செலுத்துவதை ஊக்குவித்து, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வரி நடைமுறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்.
சிக்கலான மற்றும் கடினமான நடைமுறைகளை மாற்றியமைக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பயனாளருக்கு உகந்த மற்றும் நாட்டில் வெளிப்படையான வரிவிதிப்பு முறையை ஏற்படுத்த  வேண்டும்.
உள்ளார்ந்த நிதி சேவை, சேவை வழங்குவதை எளிதாக்குதல் மற்றும் நலத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
அதிகாரிகள் தங்களது சேவையில் உயர் தரத்தை உருவாக்குவதோடு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும்
வரிவசூல் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் இந்திய வருவாய் பணி அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
வரிசட்டங்கள் மற்றும் நடைமுறைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக மாற்றுவதன் மூலம் நாட்டின் குடிமக்கள் உரிய நேரத்தில் மனமுவந்து, சிரமமின்றி வரிசெலுத்த வகை செய்ய வேண்டும்.
மலர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மலர்களிலிருந்து தேனை உறிஞ்சும் தேனீக்கள் போல, மக்களிடமிருந்து வரிவசூல் செய்பவராக அதிகாரிகள் இருக்க வேண்டும்.
வரிசெலுத்துவோருக்கும், வரிவிதிப்போருக்கும் இடையேயான கலந்துரையாடல்கள் நம்பிக்கை உணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை போன்றவற்றை கொண்டதாக இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.